Sunday, April 12, 2015

'முன்னம் அவனுடய நாமம் கேட்டாள்..'



'முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்

பெம்மான்  அவனுக்கே பிச்சியானாள்

அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை

தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்

தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!'

தலைவனின் பெயரைக் கேட்டாள் தலைவி . பெயரைக்கேட்டதுமே காதல் கொண்டாள்!  பெயருக்கே இத்தனை பெருமையா என்று வியந்துதான் போனாள்! பின் அவனது தோற்றம், இருப்பிடம் இவற்றைப் பற்றி அறிந்தாள் ! அதன்பின்பு காணுமிடமெங்கும் அவனேயானான் ! அவனையல்லால் அவளுக்கு ஒரு புகல் இல்லை ! அந்தக் கணத்திலேயே அவள் தனதெல்லாம் துறந்தாள்! தன்னைப் பெற்றவரை மறந்தாள்! தன் பெயரும் மறந்தாள் ! தன்னையே தான் மறந்தாள் ! தலைவன் தாள் ஒன்றே தன் தலையில் கொண்டாள் ! தலைவனுக்கே அடிமையானாள் ! ஒருமையுடன் அவன் திருமலரடி நினைக்கின்ற உத்தமருள் ஒருத்தியானாள் ! உலகையே மறந்தாள் ! -

இதுதான் திருநாவுக்கரசர் அவர்களின் , மேல்கண்ட திருவரிகளின் பொருள் !

இத்தகைய உத்தமமான, தெய்வீகமான  பாடலின் பொருளறிந்து , பேறரிந்து , காண்போர் பேருவகை கொள்ளும் வகையில் அபிநயம் காட்டி மகிழ்விக்கின்றார் நம்மைத் தம் நாட்டியத்தால் , குமாரி கமலா அவர்கள் ! அவரது இந்த அற்புதமான நடனத்துக்கு ஈடு இணையே இல்லை எனலாம். எத்தனை சொன்னாலும் போதாது இதனைப் பற்றி !
அறுபதுகளில்  வெளிவந்த 'பார்த்திபன் கனவு' என்ற படத்தில் இடம் பெற்ற அருமையான பாடல் !

இசை : வேதா
பாடியவர்: எம்.எல்.வசந்தகுமாரி

கேட்டு மகிழுங்கள் !

'முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்..'

கண்ணும் கண்ணும் கலந்து .....

கண்ணும் கண்ணும் கலந்து .....


நடனத்திற்குப் பெயர்போன இரண்டு நாட்டிய மணிகளின் கவின்மிகு நடனம் ! கருத்தை ஈர்க்கும் பாடலின் வரிகள் ! அருமையான இசை ! இதைவிட வேறென்ன வேண்டும் ! அந்தக்காலத்தில் மிகப் பிரபலமான இந்தப் பாடலும் நடனமும் இன்னமும் ஒளிர்கின்றன !


'ஆறுபெருகி வரின் அணை கட்டலாகும்,
அன்பெனும் பாதையில் அணையிடலாமோ'
பேதமையாலே மாதே யிப்போதே
காதலை வென்றிட கனவு காணாதே'
என்பதற்கு பதில் :

சாதுர்யம் பேசாதேடி
என் சலங்கைக்கு பதில் சொல்லடி '
நடுவிலே வந்து நில்லடி
நடையிலே சொல்லடி' -


'ஆடும் மயில் எந்தன் முன்னே
என்ன ஆணவத்தில் வந்தாயோடி
பாடும் குயில் கீதத்திலே
பொறாமைகொண்டு
படமெடுத்து ஆடாதேடி ' -

இப்படிப்போய்க்கொண்டே இருக்கும் அருமையான விவாத வரிகள் !
இயற்றமிழ் இசையாய் பொங்கும் ! கேட்டு மகிழுங்கள் !

கண்ணும் கண்ணும் கலந்து ....

படம்: வஞ்சிக்கோட்டை வாலிபன்(1958)
பாடியவர்கள் : ஜிக்கி, பி.லீலா
நடனமணிகள் : பத்மினி, வைஜயந்திமாலா
பாடலாசிரியர் : கொத்தமங்கலம் சுப்பு
இசையமைப்பு : சி. ராமச்சந்திரா


ஒருமையுடன் நினது ........

  இசையாய் பொங்கும் இயற்றமிழ் - 1
                             
                             திருவருட்பா வரிகள்
                             --------------------------------
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
        உத்தமர்தம் உறவு வேண்டும்
        உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
        உறவு கலவாமை வேண்டும்
    பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
        பேசா திருக்க வேண்டும்
        பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
        பிடியா திருக்க வேண்டும்
    மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
        மறவா திருக்க வேண்டும்
        மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
        வாழ்வுனான் வாழ வேண்டும்
    தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
        தலமோங்கு கந்த வேளே
        தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
        சண்முகத் தெய்வ மணியே.

          திரைப்படத்தில் கேட்கும் வரிகள் :
          ---------------------------------------------------
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெரும் நினதுபுகழ் பேசவேண்டும்
பொய்மை பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வுநான் வாழவேண்டும்
தண்முகத்துய்யமணி உண்முகத்தெய்வமணி
சண்முகத் தெய்வமணியே !

முருகபக்திக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது இராமலிங்க அடிகளாரின் இந்தத் திருவருட்பா ! இறைவனிடம் எத்தனையோ வரங்களை நாம் தினமும் வேண்டுகிறோம் ! (மின்சாரம் துண்டிக்கப்பட்டால், அதற்காகவும் வேண்டுகிற , என்னையும் பட்டியலில் சேர்த்துக்கொள்கிறேன் ! :-)} ஆனால், உண்மையாக நாம் என்னவெல்லாம் வேண்டவேண்டும் என்ற ஒரு அழகான பட்டியலையே இங்கு தருகிறார்  திரு. ராமலிங்க அடிகளார் !

ஒருமைப்பட்ட மனதுடன் இறைவனை நினைக்கின்ற  உத்தமர்களுடைய உறவு, மனதுக்குள் ஒன்றை வைத்து வெளியே வாய்வார்த்தைக்காக வேறொன்று சொல்கிறவர்களைத் திரித்தறிந்து அவர்களைத் தவிர்த்தல், இறைபுகழ் மட்டுமே பேசுதல், பொய் பேசாதிருத்தல், பெருமையுள்ள உண்மை நெறிகளைக் கைபிடித்தொழுகுதல் , மதமான பேய் நம்மைப் பிடிக்காதிருத்தல், பெண்ணாசையை மறத்தல் , இறைவனை மறவாதிருத்தல், நன்மதி , இறைவனின் கருணை நிதி, நோயற்ற வாழ்வு - இவை அனைத்தும்  அருளுமாறு ஆறுமுகனை வேண்டுகிறார் ! அடிகளார் தனது  வேண்டுதலின் பலனை நமக்கும் உவந்து அளிக்கிறார் என்றே நான் சொல்வேன் !  இதைப் படிக்கும் போது இவையனைத்தும் நமக்கு அருளப்பட்டதாகவே நான் கொள்கிறேன் ! அதல்லவோ நம்பிக்கை !

இறைவனின் கருணைப்பார்வை ஒன்றிருந்தால் போதும், மற்றவை நாம் கேட்காமலே கிடைத்துவிடும் என்றாலும், அதிலும் ஒரு ஐயமும் வைக்காமல் என்ன தேவை மக்களுக்கு என்பதைப் புட்டுப் புட்டு வைத்து விடுகிறார் ! ஒன்று சொல்கிறார் பாருங்கள் - 'நோயற்ற வாழ்வு' என்று ! அற்புதம் ! நோயிருந்தால் இறைவனை நினைக்கும் பக்குவத்திற்கு பங்கம் வந்து விடுமோ என்ற கவலையினால் ! அடிக்கடி நான் புலம்புகின்றேனே 'முதுகு வலிக்குதேடா முருகா' என்று - அது நினைவுக்கு வருகிறது ! 

இத்தகைய ஒரு பொக்கிஷமாகிய திருவருட்பாவை நமக்கு நல்கிய அடிகளாரின் திருப்பதம் பணிகிறேன். இந்தப் பாடலை திரைப்படத்தின் மூலம் நமக்கு அருளிச்செய்த தன்மையையும் வியக்கிறேன்! இதோ, இயற்றமிழ் இசையாய் பொங்குகிறது பாருங்கள் !

'கொஞ்சும் சலங்கை' என்ற, 1962இல் வெளியான படத்தில் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி அவர்களின் இனிமையான குரலில் இந்த திருவருட்பாவைக் கேட்டு மகிழுங்கள் ! திரைப்படத்திற்காக ஒன்றிரண்டு அடிகளைக் குறைத்து விட்டார்கள் என்ற செய்தியை , தொடர்ந்து வரும் காருகுறிச்சி அருணாசலம் அவர்களின்  அதியற்புதமான நாதஸ்வர இசை, மறக்கச் செய்து விடுகிறது என்பது ஒரு மகத்தான மறுக்கமுடியாத உண்மை !

பாடல்:- திருவருட்பா.
படம்:- கொஞ்சும் சலங்கை;
இசை:- எஸ்.எம்.சுப்பை நாயுடு;
நாதஸ்வரம்:- காருகுறிச்சி அருணாசலம்;
பாடியவர்கள்:- சூலமங்கலம் ராஜலக்ஷ்மி;

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற...