Sunday, April 12, 2015

'முன்னம் அவனுடய நாமம் கேட்டாள்..'



'முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்

பெம்மான்  அவனுக்கே பிச்சியானாள்

அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை

தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்

தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!'

தலைவனின் பெயரைக் கேட்டாள் தலைவி . பெயரைக்கேட்டதுமே காதல் கொண்டாள்!  பெயருக்கே இத்தனை பெருமையா என்று வியந்துதான் போனாள்! பின் அவனது தோற்றம், இருப்பிடம் இவற்றைப் பற்றி அறிந்தாள் ! அதன்பின்பு காணுமிடமெங்கும் அவனேயானான் ! அவனையல்லால் அவளுக்கு ஒரு புகல் இல்லை ! அந்தக் கணத்திலேயே அவள் தனதெல்லாம் துறந்தாள்! தன்னைப் பெற்றவரை மறந்தாள்! தன் பெயரும் மறந்தாள் ! தன்னையே தான் மறந்தாள் ! தலைவன் தாள் ஒன்றே தன் தலையில் கொண்டாள் ! தலைவனுக்கே அடிமையானாள் ! ஒருமையுடன் அவன் திருமலரடி நினைக்கின்ற உத்தமருள் ஒருத்தியானாள் ! உலகையே மறந்தாள் ! -

இதுதான் திருநாவுக்கரசர் அவர்களின் , மேல்கண்ட திருவரிகளின் பொருள் !

இத்தகைய உத்தமமான, தெய்வீகமான  பாடலின் பொருளறிந்து , பேறரிந்து , காண்போர் பேருவகை கொள்ளும் வகையில் அபிநயம் காட்டி மகிழ்விக்கின்றார் நம்மைத் தம் நாட்டியத்தால் , குமாரி கமலா அவர்கள் ! அவரது இந்த அற்புதமான நடனத்துக்கு ஈடு இணையே இல்லை எனலாம். எத்தனை சொன்னாலும் போதாது இதனைப் பற்றி !
அறுபதுகளில்  வெளிவந்த 'பார்த்திபன் கனவு' என்ற படத்தில் இடம் பெற்ற அருமையான பாடல் !

இசை : வேதா
பாடியவர்: எம்.எல்.வசந்தகுமாரி

கேட்டு மகிழுங்கள் !

'முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்..'

1 comment:

  1. ஒப்பற்ற இத்தன்மையே கொண்ட சிவனை நினைக்கயில் என் மனமும் இவ்வாறே அவனுக்குப் பித்தாகிறது.திருச்சிற்றம்பலம்!

    ReplyDelete