Wednesday, April 20, 2016

ஜெகம் புகழும் புண்யகதை

இசையாய் பொங்கும் இயற்றமிழ் - 7
ஜெகம் புகழும் புண்யகதை ராமனின் கதையே !

நினைவுகள் பலப்பல வருடங்கள் பின்னோக்கிச் செல்கின்றன. என்ன ஒரு அருமையான பாடல் ! அற்புதமான இசை ! குயிலினும் இனிய குரல்கள் !

திரைப்படம் : லவகுசா
பாடலாசிரியர் : மருதகாசி
இசையமைப்பு : கே.வி.மகாதேவன்

https://www.youtube.com/watch?v=2ZXbEGMNHGY

ஹிந்தோளம்,ஆரபி,மோகனம்,ஸாரமதி,பேகடா,ஹம்ஸானந்தி,சுருட்டி,சஹானா, பாகேஸ்ரீ, ரீதிகௌளை, சிந்துபைரவி, காபி, நீலமணி, பிருந்தாவன சாரங்கா,நாட்டைகுறிஞ்சி, திலங்க் ஆகிய அற்புதமான ராகங்களில் இசையை அமைத்திருக்கிறார் திரையிசைத் திலகம் திரு கே.வி.மகாதேவன் அவர்கள் . மிக அருமையாகப் பாடியிருக்கிறார்கள் திருமதி பி.சுசீலா அவர்களும் திருமதி பி.லீலா அவர்களும் தமது தேனினும் இனிய குரலில் !  மருதகாசி அவர்கள் மகாபுண்ணியம் செய்தவர்கள் , இத்தகைய அருமையான படைப்பிற்குக் கடவுள் அவரைத் தெரிந்தெடுத்ததற்கு!  எளிமையும், அழகும், ஆழமும், பக்தியும் ஒருங்கிணைந்த வரிகள் என்றால் , அவை இவைதான்!  வரிகளைப் படித்துக்கொண்டே பாடலையும் கேளுங்கள் இங்கே ! பரவசநிலையை அடைவீர்கள் ! பறந்து எங்கோ செல்வீர்கள் !
                                                    --------------
ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே
உங்கள் செவிகுளிர பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே..

இகபர சுகமெல்லாம் அடைந்திடலாமே
இந்த கதை கேட்கும் எல்லோருமே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும்போதிலே (2)
இணையே இல்லாத காவியமாகும்..(ஜெகம் புகழும்)

அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்
அவன் மனைவி கெளசல்யா, கைகேயி, சுமித்திரை
கருவினிலே உருவானார் ராமர், லஷ்மணர்
கனிவுள்ள பரதன், சத்ருக்னர் நால்வர்..

நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை
ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தாரே..
காட்டில் கெளசிகன் யாகத்தைக் காக்கவே
கண்மணி ராமலஷ்மணரை அனுப்பினனே
கண்மணி ராமலஷ்மணரை அனுப்பினனே..

தாடகை சுபாகுவை தரையில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே (2)
பாதையில் அகலிகை சாபத்தை தீர்த்தபின் (2)
சீர்பெறும் மிதிலை நகர் நாடி சென்றனரே..

வீதியில் சென்றிடும் போதிலே ராமன்
சீதையை கன்னி மாட மீதிலே கண்டான்
காதலினால் இருவர் கண்களும் கலந்தனர்(2)
கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்..

ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்
அகந்தை தன்னை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்
அரும் புதல்வனின் வீரத்தை கண்ட மன்னன்
அளவில்லா ஆனந்த நிலையை கண்டான்...(ஜெகம் புகழும்)

மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணி முடி சூட்டவே நாள் குறித்தானே(2)
மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே
மகரத் தோரணத்தால் அலங்கரித்தனரே..

மந்தரை போதனையால் மனம்மாறி கைகேயி
மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்
வனத்தில் ராமன் பதினான்காண்டுகள் வாழவும்
மன்னனிடம் வரமதைக் கேட்டாள்..

அந்த சொல்லைக் கேட்ட மன்னர்
மரண மூச்சை அடைந்த பின்னர்
ராமனையும் அழைக்கச் செய்தாள்
தந்தை உன்னை வனம் போக சொல்லி
தம்பி பரதனுக்கு மகுடத்தை தந்தார் என்றாள்..

சஞ்சலமில்லாமல் அஞ்சன வண்ணனும்
சம்மதம் தாயே என வணங்கி சென்றான்
மிஞ்சிய கோபத்தால் வெகுண்டே விலெடுத்த
தம்பி இலக்குவனை சாந்தமாக்கினார்..

இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுரி தரித்து ராமன் செல்வதைக் கண்டு (2)
கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே
உடன் எனப் போவதென்று தடுத்தனர் சென்று..

ஆறுதல் கூறியே கார்முகில் வந்தான்
அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே
அன்னையும் தந்தையும் சொன்னதற்காகவே
அன்னலும் கானகத்தை நாடிச் சென்றானே...(ஜெகம் புகழும்)

கங்கைக் கரைஅதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான் (2)
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்(2)
அஞ்சக வண்ணன் அங்கு சென்று தங்கினான் (2)

ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள் (2)
கோபம் கொண்ட இளையோன்
குரும்பால் அவளை மானபங்கம் செய்து விரட்டி விட்டன்..

தங்கையின் போதனையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்..(2)
நெஞ்சம் கனலாகி கண்கள் குளமாகி
தம்பியுடன் தேவியைத் தேடிச் சென்றான்..

வழியிலே ஜடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்
வாயு மைந்தன் ஹனுமனின் நட்பைக் கொண்டான்
ஆழியைத் தாண்டி இலங்கை சென்ற ஹனுமான்
அன்னையை அசோக வனத்தில் கண்டான்..

"ராம சாமியின் தூதன் நானடா ராவணா" என்றான்
ஹனுமார் லங்காபுரியைத் தீக்கிரையாக்கி கிஷ்கிந்தை சென்றான்
"கண்டேன் அன்னையை" என்றே ராமனை சேவித்தே நின்றான்
கடலைக் கடந்து அய்யன் வானர சேனையுடன் சென்றான்
வானர சேனையுடன் சென்றான்..

விபீஷணனின் நட்பைக் கொண்டான்
விபீஷணனின் ராவணனை வென்றான்
வீரமாதா ஜானகி தேவியை தீக்குளிக்க செய்தான்
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டார்(2)
மக்கள் பலரும் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான்
அரசுரிமை கொண்டான்...(ஜெகம் புகழும்)

---Krishnamurthi Balaji

காற்று வெளியிடைக் கண்ணம்மா...

இசையாய் பொங்கும் இயற்றமிழ் - 6

காற்று வெளியிடைக் கண்ணம்மா...

காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு
தூற்றினை யொத்த இதழ்களும் - நில
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று)

நீயென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன்
வாயினி லேயமு தூறுதே - கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
தீயினி லேவளர் சோதியே - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று)

மகாகவி பாரதியாரின் இந்தப் பாடலை அறியாதவர்களே இருக்க முடியாது எனலாம். தன காதலியைப்பற்றிய கவினூறும்  வரிகளைக் கவிதையாய் வடிக்கிறான் கவிஞன் ! மகாகவியின் கற்பனையே கற்பனை ! பாரதியின் இந்தப் பாடலில் கண்ணம்மா என்ற தன் காதலியைப் பற்றி வருணிக்கும் அழகைப் பாருங்கள் ! அருமையான காற்றின் சுகத்தை அனுபவிக்கும் நேரத்தில் அவனுள் என்றும் நிலைத்திருக்கும் காதலியின் நினைவும் அவளது அன்பும் முந்திக்கொண்டு வருகிறது ! அவளது காதலை எண்ணிக் களிக்கின்றானாம்! அமுதூற்றினையொத்தவை  அவளது இதழ்கள் என்கிறான் ! விழிகளில் இருக்கும் குளிர்ச்சியைக் குறிப்பிடும் அழகைப் பாருங்கள் ! தண்ணிலவு அவளது விழிகளிலே ஊறித் ததும்பி வழிகிறதாம் ! நம்மைப் போன்றவர்கள் கண்ணின் அழகை மட்டும் சொல்லி விட்டுவிடுவோம் ! அவன் மகாகவி அல்லவா! அந்தக் கண்களின் தன்மையைப் பற்றி ஒரு வரியில் ஒரு காவியமே படைக்கிறான் ! அவள் மேனி பத்தரைமாற்றுத் தங்கமாம் ! இவையனைத்தும் இந்த வையத்தில் அவன் வாழும் காலம் வரை அவளைத் தவிர வேறெந்த நினைவும் கொள்ளாமலிருக்கச் செய்வது மட்டுமில்லை ! இந்த மண்ணுலகத்தானாகிய அவனை ஒரு விண்ணுலகைச் சேர்ந்தவனாகவே செய்து விடுகிறதாம் ! என்ன ஒரு கற்பனை பாருங்கள்!  அடுத்த கண்ணியில் அவன் சொல்வதையெல்லாம் பாருங்கள் !

"நீயென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே" -  இதிலே ஒரு சிறப்பை கவனியுங்கள் ! எந்த அளவுக்கு அவன் பெண்மையை மதிக்கிறான் என்பது புரியும் ! பொன்னுக்கும் மேலாகப் பெண்ணை மதிக்கின்ற பொழுதில் துயர்கள் அனைத்தும் போய்விடுகின்றன என்கிறான் ! என்ன ஒரு கண்ணியமான காதல் ! விண்ணவனுக்கிணையாகிவிட்ட அவன் வாயினிலே அவள் பெயரைச் சொல்லும்போது , விண்ணுக்கே உரித்தான அமிழ்தம் சுரக்கிறதாம் ! அவளே அவனது உயிர் என்கிறான்! அது மட்டுமில்லை . உயிராகிய தீயில் நிலைக்கின்ற ஜோதியே அவள்தான் என்கிறான் ! ஜீவாத்மாவின் சைதன்யம் அந்த ஜோதி என்ற தத்துவார்த்தமான செய்தி இங்கே பகிரப்படுகிறது என்பதையும் கவனியுங்கள் ! அவன் சித்தமும் சிந்தனையும் அந்த ஜோதியேதான் ! ஆஹா! என்ன ஒரு அருமையான பாடல் ! பாரதி என்னும் கடலில் குளித்து எடுத்த முத்துக்களில் ஒரு முத்து  இது, எனலாம் !

'கப்பலோட்டிய தமிழன்' திரைப்படத்தில் இந்தப்பாடல் சிந்தை மயக்கும் விந்தை புரிந்தது திரு.ஜி.ராமநாதன் அவர்களின் இசையிலும், பி.பி ஸ்ரீநிவாஸ் மற்றும் பி.சுசீலா அவர்களின் தேனையொத்த தீங்குரலிலும் ! இதற்குப்பிறகு இசையறிந்த ஒவ்வொருவரின் உதடுகளிலும் இந்தப்பாடல் புகுந்து புறப்படாமல் இருந்ததே இல்லை எனலாம் !   இந்த இசை மேலாகப் பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றலாம் ! ஆனால் பாடிப்பார்க்கும்போதுதான் தெரியும் அதன் ஆழம் என்னவென்று ! அத்தகைய ஒரு பாடலை வெகு லாவகமாக அளாவியிருக்கிறார்கள் பாடகர்கள் ! உங்கள் சித்தத்தைக் குளிர வைக்க, சிந்தையை மகிழவைக்க , இதோ வருகிறது அந்தப்பாடல் , இசையாய் பொங்கும் இயற்றமிழாய் !

https://www.youtube.com/watch?v=7EatF_2QMRw




தீராத விளையாட்டுப் பிள்ளை


தீராத  விளையாட்டுப்  பிள்ளை  - கண்ணன்
தெருவிலே  பெண்களுக்கோயாத  தொல்லை      (தீராத)  

தின்னப்  பழம்  கொண்டு  வருவான்  - பாதி
தின்கின்ற  போதிலே  தட்டிப்  பறிப்பான்
என்னப்பன்  என்னைய்யன்  என்றால்  - அதனை
எச்சிற்  படுத்திக்  கடித்துக்  கொடுப்பான்                 (தீராத)  

அழகுள்ள  மலர்  கொண்டு  வந்தே  - என்னை
அழ  அழச்  செய்தபின்  கண்ணை  மூடிக்  கொள்
குழலிலே  சூட்டுவேன்  என்பான்  - என்னைக்
குருடாக்கி  மலரினை  தோழிக்கு  வைப்பான்      (தீராத)  

பின்னலைப்  பின்னின்றிழுப்பான்  - தலை
பின்னே  திரும்புமுன்னே   சென்று  மறைவான்
வண்ணப்  புதுச்  சேலை  தனிலே  - புழுதி
வாரிச்  சொரிந்தே  வருத்திக்  குலைப்பான்            (தீராத)  

புல்லாங்குழல்  கொண்டு  வருவான்  - அமுது
பொங்கித்  ததும்பு நல்  கீதம்  படைப்பான்
கள்ளால் மயங்குவது  போலே  - அதைனைக்
கண்மூடி  வாய்திறந்தே  கேட்டிருப்போம்                (தீராத)  

                                                    ******

மகாகவி பாரதியாரின் இந்த அருமையான பாடலுக்கு விளக்கம் தேவையேயில்லை ! அத்தனை எளிமையான தமிழில் அருமையிலும் அருமையாக ஒரு பாட்டு!  கண்ணனின் திருவிளையாடல்களை என்ன அழகாகக் கற்பனை செய்து வார்த்தையில் வடித்துக் கொட்டியிருக்கிறார் என்றால், மிகையாகாது !  மலர் கொண்டுவந்து , மயக்கித், தலையில் சூட்டுகிறேன் என்று சொல்லிப், பிறகு கண்ணைத்திறந்து பார்ப்பதற்குள் தோழியின் தலையில் சூட்டிவிட்டுச் சென்றுவிடுவானாம் !  பழத்திற்கு ஆசை காட்டிப் பின் அதைத் தருவானாம், ஆனால் அதை எச்சிற்படுத்திய பிறகு ! வண்ணப் புதுச்சேலையில் புழுதி வாரியிறைப்பானாம் !  என்ன ஒரு எளிமையான, தீதற்ற நகைச்சுவை !

இங்கே கொடுத்திருக்கும் பாடலில் இல்லாத ஒரு கண்ணி எனக்கு நினைவுக்கு வருகிறது !

'அங்காந்திருக்கும் வாய்தனிலே கண்ணன்
ஆறேழு கட்டெறும்பைப் போட்டு விடுவான்
எங்காகிலும் பார்த்ததுண்டோ இதுபோல் "  என்று கேட்கிறார் கவிஞர் !

நினைத்துப் பார்த்தால் சிரிப்பை வரவழைக்கக் கூடிய இத்தகைய ஒரு கற்பனையை , இத்தனை எளிமையான வார்தைகளில் தர மகாகவி ஒருவரால் மட்டும்தான் முடியும் !

இவ்வளவு நல்ல ஒரு பாடலை நாற்பதுகளில் வெளிவந்த 'வேதாள உலகம்' என்ற படத்தில் மிக அருமையாகப் பாடியுள்ளார் திருமதி டி.கே. பட்டம்மாள் அவர்கள் ! கண்ணெதிரிலே கண்ணனின் குறும்புகளைக் கொண்டுவந்து நிறுத்துகிறார் குமாரி கமலா அவர்கள், தமது அற்புதமான அபிநயங்களால் ! அன்றிலிருந்து இன்றுவரை நினைவுகளில் என்றும் நீங்காத ஒரு பாடலாகத் திகழ்கிறது இந்தப்பாடல் ! இந்த அமர கானத்தைக் கேட்டு மகிழுங்கள் இங்கே !

'அன்னையும் தந்தையும் தானே'



உணர்ச்சியும் இசையும் ஒருங்கே இணைந்திருக்கும் வரிகளை எழுதுவதில் அந்த நாட்களில்  புகழ் பெற்றவர் பாபநாசம் சிவன் அவர்கள். எடுத்துக்காட்டாக, அவரது பாடல்களில்  பக்தி என்று எடுத்துக்கொண்டால்,  தெய்வ பக்தியை மீறிப் பெற்றோரின் மீது பூண்ட பக்திக்கு நிகரில்லை என்ற உண்மை மனதில் தோன்றியது . இந்த அருமையான கருத்தை உள்ளடக்கிய அற்புதப் பாடல் ஒன்று 1940களில் வெளிவந்த 'ஹரிதாஸ்'  என்ற படத்தில் , பாபனாசம் சிவன் அவர்களின் வரிகளுடன் இதோ உங்களது கவனத்திற்கு . 1944, 45, 46 ஆகிய மூன்று ஆண்டுகள் ஒரே திரையரங்கில் தொடர்ந்து ஓடி சாதனை புரிந்த ஒரு படமாகத் திகழ்ந்தது 'ஹரிதாஸ்' .  சிவன் அவர்களின் வரிகளுக்கு அவரேதான் இசை அமைப்பார் என்று கேள்வியுற்றிருக்கிறேன் ! ஆனால் ஓரிடத்தில் இது திரு ஜி.என்.ராமநாதன் அவர்களின் இசை என்று குறிப்பிட்டுள்ளதையும் கண்டேன் ! இதோ பாடல் வரிகளைத் தொடர்ந்து பாடலும் வருகிறது : அருமையான கருத்தாழமும் அதே சமயத்தில் எளிமையும் மிகுந்த, அலங்காரமற்ற, ஆனால் அற்புதமான வரிகள் !


https://www.youtube.com/watch?v=VsJ-TDXJgIQ


திரைப்படம்: ஹரிதாஸ்;
ஆண்டு: 1944;
இயற்றியவர்: பாபநாசம் சிவன்;
இசை: ஜி. ராமநாதன்;
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்.


அன்னையும்  தந்தையும்  தானே  பாரில் (2)
அண்ட  சராசரம்  கண்கண்ட  தெய்வம்              (அன்னையும்)

தாயினும்  கோவில்  இங்கேது
தாயினும்  கோவில்  இங்கேது  ஈன்ற
தந்தை  சொல்  மிக்கதோர்  மந்திரமேது
தந்தை  சொல்  மிக்கதோர்  மந்திரமேது
சேயின் கடன்  அன்னை  தொண்டு
சேயின்  கடன்  அன்னை  தொண்டு  புண்ய
தீர்த்தமும்  மூர்த்தி  ஸ்தலம்  இதில்  உண்டு
தீர்த்தமும்  மூர்த்தி  ஸ்தலம்  இதில்  உண்டு          (அன்னையும்)

    தாயுடன்  தந்தையின்  பாதம்  - என்றும்
    தலை  வணங்காதவன்  நாள்  தவறாமல்
    கோவிலில்  சென்று  என்ன  காண்பான்
    நந்த  கோபாலன்  வேண்டும்  வரம்  தருவானோ

பொன்னுடல் தன்பொருள்  பூமி
பொன்னுடல்  தன்  பொருள்  பூமி   - பெண்டிர்
புத்திரரும்  புகழ்  இத்தனை  வாழ்வும்
புத்திரரும்  புகழ்  இத்தனை  வாழ்வும்
அன்னை  பிதா  இன்றி  ஏது
அன்னை  பிதா  இன்றி  ஏது  - மரம்
ஆயின்  விதை  இன்றி  காய்  கனி  ஏது
ஆயின்  விதை  இன்றி  காய்  கனி  ஏது
அன்னையும்  தந்தையும்  தானே  பாரில்
அண்ட  சராசரம்  கண் கண்ட  தெய்வம்
அன்னையும்  தந்தையும்  தானே..... தெய்வம்


--கே.பாலாஜி
23.06.2015

Sunday, April 12, 2015

'முன்னம் அவனுடய நாமம் கேட்டாள்..'



'முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்

பெம்மான்  அவனுக்கே பிச்சியானாள்

அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை

தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்

தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!'

தலைவனின் பெயரைக் கேட்டாள் தலைவி . பெயரைக்கேட்டதுமே காதல் கொண்டாள்!  பெயருக்கே இத்தனை பெருமையா என்று வியந்துதான் போனாள்! பின் அவனது தோற்றம், இருப்பிடம் இவற்றைப் பற்றி அறிந்தாள் ! அதன்பின்பு காணுமிடமெங்கும் அவனேயானான் ! அவனையல்லால் அவளுக்கு ஒரு புகல் இல்லை ! அந்தக் கணத்திலேயே அவள் தனதெல்லாம் துறந்தாள்! தன்னைப் பெற்றவரை மறந்தாள்! தன் பெயரும் மறந்தாள் ! தன்னையே தான் மறந்தாள் ! தலைவன் தாள் ஒன்றே தன் தலையில் கொண்டாள் ! தலைவனுக்கே அடிமையானாள் ! ஒருமையுடன் அவன் திருமலரடி நினைக்கின்ற உத்தமருள் ஒருத்தியானாள் ! உலகையே மறந்தாள் ! -

இதுதான் திருநாவுக்கரசர் அவர்களின் , மேல்கண்ட திருவரிகளின் பொருள் !

இத்தகைய உத்தமமான, தெய்வீகமான  பாடலின் பொருளறிந்து , பேறரிந்து , காண்போர் பேருவகை கொள்ளும் வகையில் அபிநயம் காட்டி மகிழ்விக்கின்றார் நம்மைத் தம் நாட்டியத்தால் , குமாரி கமலா அவர்கள் ! அவரது இந்த அற்புதமான நடனத்துக்கு ஈடு இணையே இல்லை எனலாம். எத்தனை சொன்னாலும் போதாது இதனைப் பற்றி !
அறுபதுகளில்  வெளிவந்த 'பார்த்திபன் கனவு' என்ற படத்தில் இடம் பெற்ற அருமையான பாடல் !

இசை : வேதா
பாடியவர்: எம்.எல்.வசந்தகுமாரி

கேட்டு மகிழுங்கள் !

'முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்..'

கண்ணும் கண்ணும் கலந்து .....

கண்ணும் கண்ணும் கலந்து .....


நடனத்திற்குப் பெயர்போன இரண்டு நாட்டிய மணிகளின் கவின்மிகு நடனம் ! கருத்தை ஈர்க்கும் பாடலின் வரிகள் ! அருமையான இசை ! இதைவிட வேறென்ன வேண்டும் ! அந்தக்காலத்தில் மிகப் பிரபலமான இந்தப் பாடலும் நடனமும் இன்னமும் ஒளிர்கின்றன !


'ஆறுபெருகி வரின் அணை கட்டலாகும்,
அன்பெனும் பாதையில் அணையிடலாமோ'
பேதமையாலே மாதே யிப்போதே
காதலை வென்றிட கனவு காணாதே'
என்பதற்கு பதில் :

சாதுர்யம் பேசாதேடி
என் சலங்கைக்கு பதில் சொல்லடி '
நடுவிலே வந்து நில்லடி
நடையிலே சொல்லடி' -


'ஆடும் மயில் எந்தன் முன்னே
என்ன ஆணவத்தில் வந்தாயோடி
பாடும் குயில் கீதத்திலே
பொறாமைகொண்டு
படமெடுத்து ஆடாதேடி ' -

இப்படிப்போய்க்கொண்டே இருக்கும் அருமையான விவாத வரிகள் !
இயற்றமிழ் இசையாய் பொங்கும் ! கேட்டு மகிழுங்கள் !

கண்ணும் கண்ணும் கலந்து ....

படம்: வஞ்சிக்கோட்டை வாலிபன்(1958)
பாடியவர்கள் : ஜிக்கி, பி.லீலா
நடனமணிகள் : பத்மினி, வைஜயந்திமாலா
பாடலாசிரியர் : கொத்தமங்கலம் சுப்பு
இசையமைப்பு : சி. ராமச்சந்திரா


ஒருமையுடன் நினது ........

  இசையாய் பொங்கும் இயற்றமிழ் - 1
                             
                             திருவருட்பா வரிகள்
                             --------------------------------
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
        உத்தமர்தம் உறவு வேண்டும்
        உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
        உறவு கலவாமை வேண்டும்
    பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
        பேசா திருக்க வேண்டும்
        பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
        பிடியா திருக்க வேண்டும்
    மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
        மறவா திருக்க வேண்டும்
        மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
        வாழ்வுனான் வாழ வேண்டும்
    தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
        தலமோங்கு கந்த வேளே
        தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
        சண்முகத் தெய்வ மணியே.

          திரைப்படத்தில் கேட்கும் வரிகள் :
          ---------------------------------------------------
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெரும் நினதுபுகழ் பேசவேண்டும்
பொய்மை பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வுநான் வாழவேண்டும்
தண்முகத்துய்யமணி உண்முகத்தெய்வமணி
சண்முகத் தெய்வமணியே !

முருகபக்திக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது இராமலிங்க அடிகளாரின் இந்தத் திருவருட்பா ! இறைவனிடம் எத்தனையோ வரங்களை நாம் தினமும் வேண்டுகிறோம் ! (மின்சாரம் துண்டிக்கப்பட்டால், அதற்காகவும் வேண்டுகிற , என்னையும் பட்டியலில் சேர்த்துக்கொள்கிறேன் ! :-)} ஆனால், உண்மையாக நாம் என்னவெல்லாம் வேண்டவேண்டும் என்ற ஒரு அழகான பட்டியலையே இங்கு தருகிறார்  திரு. ராமலிங்க அடிகளார் !

ஒருமைப்பட்ட மனதுடன் இறைவனை நினைக்கின்ற  உத்தமர்களுடைய உறவு, மனதுக்குள் ஒன்றை வைத்து வெளியே வாய்வார்த்தைக்காக வேறொன்று சொல்கிறவர்களைத் திரித்தறிந்து அவர்களைத் தவிர்த்தல், இறைபுகழ் மட்டுமே பேசுதல், பொய் பேசாதிருத்தல், பெருமையுள்ள உண்மை நெறிகளைக் கைபிடித்தொழுகுதல் , மதமான பேய் நம்மைப் பிடிக்காதிருத்தல், பெண்ணாசையை மறத்தல் , இறைவனை மறவாதிருத்தல், நன்மதி , இறைவனின் கருணை நிதி, நோயற்ற வாழ்வு - இவை அனைத்தும்  அருளுமாறு ஆறுமுகனை வேண்டுகிறார் ! அடிகளார் தனது  வேண்டுதலின் பலனை நமக்கும் உவந்து அளிக்கிறார் என்றே நான் சொல்வேன் !  இதைப் படிக்கும் போது இவையனைத்தும் நமக்கு அருளப்பட்டதாகவே நான் கொள்கிறேன் ! அதல்லவோ நம்பிக்கை !

இறைவனின் கருணைப்பார்வை ஒன்றிருந்தால் போதும், மற்றவை நாம் கேட்காமலே கிடைத்துவிடும் என்றாலும், அதிலும் ஒரு ஐயமும் வைக்காமல் என்ன தேவை மக்களுக்கு என்பதைப் புட்டுப் புட்டு வைத்து விடுகிறார் ! ஒன்று சொல்கிறார் பாருங்கள் - 'நோயற்ற வாழ்வு' என்று ! அற்புதம் ! நோயிருந்தால் இறைவனை நினைக்கும் பக்குவத்திற்கு பங்கம் வந்து விடுமோ என்ற கவலையினால் ! அடிக்கடி நான் புலம்புகின்றேனே 'முதுகு வலிக்குதேடா முருகா' என்று - அது நினைவுக்கு வருகிறது ! 

இத்தகைய ஒரு பொக்கிஷமாகிய திருவருட்பாவை நமக்கு நல்கிய அடிகளாரின் திருப்பதம் பணிகிறேன். இந்தப் பாடலை திரைப்படத்தின் மூலம் நமக்கு அருளிச்செய்த தன்மையையும் வியக்கிறேன்! இதோ, இயற்றமிழ் இசையாய் பொங்குகிறது பாருங்கள் !

'கொஞ்சும் சலங்கை' என்ற, 1962இல் வெளியான படத்தில் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி அவர்களின் இனிமையான குரலில் இந்த திருவருட்பாவைக் கேட்டு மகிழுங்கள் ! திரைப்படத்திற்காக ஒன்றிரண்டு அடிகளைக் குறைத்து விட்டார்கள் என்ற செய்தியை , தொடர்ந்து வரும் காருகுறிச்சி அருணாசலம் அவர்களின்  அதியற்புதமான நாதஸ்வர இசை, மறக்கச் செய்து விடுகிறது என்பது ஒரு மகத்தான மறுக்கமுடியாத உண்மை !

பாடல்:- திருவருட்பா.
படம்:- கொஞ்சும் சலங்கை;
இசை:- எஸ்.எம்.சுப்பை நாயுடு;
நாதஸ்வரம்:- காருகுறிச்சி அருணாசலம்;
பாடியவர்கள்:- சூலமங்கலம் ராஜலக்ஷ்மி;

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற...