Wednesday, April 20, 2016

தீராத விளையாட்டுப் பிள்ளை


தீராத  விளையாட்டுப்  பிள்ளை  - கண்ணன்
தெருவிலே  பெண்களுக்கோயாத  தொல்லை      (தீராத)  

தின்னப்  பழம்  கொண்டு  வருவான்  - பாதி
தின்கின்ற  போதிலே  தட்டிப்  பறிப்பான்
என்னப்பன்  என்னைய்யன்  என்றால்  - அதனை
எச்சிற்  படுத்திக்  கடித்துக்  கொடுப்பான்                 (தீராத)  

அழகுள்ள  மலர்  கொண்டு  வந்தே  - என்னை
அழ  அழச்  செய்தபின்  கண்ணை  மூடிக்  கொள்
குழலிலே  சூட்டுவேன்  என்பான்  - என்னைக்
குருடாக்கி  மலரினை  தோழிக்கு  வைப்பான்      (தீராத)  

பின்னலைப்  பின்னின்றிழுப்பான்  - தலை
பின்னே  திரும்புமுன்னே   சென்று  மறைவான்
வண்ணப்  புதுச்  சேலை  தனிலே  - புழுதி
வாரிச்  சொரிந்தே  வருத்திக்  குலைப்பான்            (தீராத)  

புல்லாங்குழல்  கொண்டு  வருவான்  - அமுது
பொங்கித்  ததும்பு நல்  கீதம்  படைப்பான்
கள்ளால் மயங்குவது  போலே  - அதைனைக்
கண்மூடி  வாய்திறந்தே  கேட்டிருப்போம்                (தீராத)  

                                                    ******

மகாகவி பாரதியாரின் இந்த அருமையான பாடலுக்கு விளக்கம் தேவையேயில்லை ! அத்தனை எளிமையான தமிழில் அருமையிலும் அருமையாக ஒரு பாட்டு!  கண்ணனின் திருவிளையாடல்களை என்ன அழகாகக் கற்பனை செய்து வார்த்தையில் வடித்துக் கொட்டியிருக்கிறார் என்றால், மிகையாகாது !  மலர் கொண்டுவந்து , மயக்கித், தலையில் சூட்டுகிறேன் என்று சொல்லிப், பிறகு கண்ணைத்திறந்து பார்ப்பதற்குள் தோழியின் தலையில் சூட்டிவிட்டுச் சென்றுவிடுவானாம் !  பழத்திற்கு ஆசை காட்டிப் பின் அதைத் தருவானாம், ஆனால் அதை எச்சிற்படுத்திய பிறகு ! வண்ணப் புதுச்சேலையில் புழுதி வாரியிறைப்பானாம் !  என்ன ஒரு எளிமையான, தீதற்ற நகைச்சுவை !

இங்கே கொடுத்திருக்கும் பாடலில் இல்லாத ஒரு கண்ணி எனக்கு நினைவுக்கு வருகிறது !

'அங்காந்திருக்கும் வாய்தனிலே கண்ணன்
ஆறேழு கட்டெறும்பைப் போட்டு விடுவான்
எங்காகிலும் பார்த்ததுண்டோ இதுபோல் "  என்று கேட்கிறார் கவிஞர் !

நினைத்துப் பார்த்தால் சிரிப்பை வரவழைக்கக் கூடிய இத்தகைய ஒரு கற்பனையை , இத்தனை எளிமையான வார்தைகளில் தர மகாகவி ஒருவரால் மட்டும்தான் முடியும் !

இவ்வளவு நல்ல ஒரு பாடலை நாற்பதுகளில் வெளிவந்த 'வேதாள உலகம்' என்ற படத்தில் மிக அருமையாகப் பாடியுள்ளார் திருமதி டி.கே. பட்டம்மாள் அவர்கள் ! கண்ணெதிரிலே கண்ணனின் குறும்புகளைக் கொண்டுவந்து நிறுத்துகிறார் குமாரி கமலா அவர்கள், தமது அற்புதமான அபிநயங்களால் ! அன்றிலிருந்து இன்றுவரை நினைவுகளில் என்றும் நீங்காத ஒரு பாடலாகத் திகழ்கிறது இந்தப்பாடல் ! இந்த அமர கானத்தைக் கேட்டு மகிழுங்கள் இங்கே !

No comments:

Post a Comment